சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 1

 அமெரிக்காஅரசியல்சிரியாவரலாறுFebruary 21, 2016March 4, 2016  இ.பா.சிந்தன்

image

ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் தொடங்கிய போர் சிரியாவோடு முடிந்துவிடுமா அல்லது மூன்றாம் உலகப்போருக்கான ஆயத்தப்பணிகளா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் தேடும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்….

உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு காலகட்டங்களில் சண்டைகளும் போர்களும் ஏதாவதொரு பகுதியில் நடந்துகொண்டேதான் வந்திருக்கின்றன. ஆங்காங்கே சில பகுதிகளில் சில குழுக்களுக்குள்ளும் சில நாடுகளுக்குள்ளும் நடந்துகொண்டிருந்த சண்டைகள், 20 ஆம் நூன்றாண்டின் துவக்கத்தில் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இருகுழுக்களாக நின்று சண்டையிட்டுக்கொண்ட முதலிரண்டு உலகப்போர்களையும் இவ்வுலகம் பார்த்திருக்கிறது. அப்போர்களுக்குப்பின்னர் அமைக்கப்பட்ட ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், ஏராளமாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களும், உலக அரங்கில் அமைதியைத்தானே கொண்டுவந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அதே அமைப்புகளையும் ஒப்பந்தங்களையும் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த வலிமைபெற்ற நாடுகள் புறப்பட்டுவிட்டன.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் உலகின் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டன், பிரான்சு, ஸ்பெயின், ஹாலந்து, ஜப்பான், ஜெர்மனி போன்றவை இரண்டாம் உலகப்போரில் பெரும் இழப்புகளை சந்தித்தன. சில நாடுகள் போரில் தோற்றதால் வலுவிழந்தும், சில நாடுகள் போரினால் உண்டான பாதிப்பினால் வலுவிழந்தும் போயின. அப்போரில் வெற்றிபெற்றிருந்தாலும் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்த நாடு சோவியத் யூனியன் தான். சோவியத் யூனியனின் எல்லைகள் சுற்றிவளைக்கப்பட்டும், எல்லைப்புற நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டும், இறுதியில் தனது எல்லைக்குள்ளேயும் நுழைந்துவிட்ட ஜெர்மனியை எதிர்த்து நேருக்கு நேராக சண்டையிடவேண்டிய கட்டாயத்தில் சோவியத் யூனியன் இருந்தது. அதற்கு நேர்மாறாக அமெரிக்காவுக்கோ இப்படியான பிரச்சனைகளையும் இழப்புகளையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அமெரிக்க நிலத்திற்குள் உலகப்போர்கள் நுழையவேயில்லை, அதனால் சிறியளவிலான படைகளை வைத்துக்கொண்டே பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் போர்புரிந்துகொண்டிருந்தது அமெரிக்கா. இன்னும் சொல்லப்போனால் அதிக பலம்வாய்ந்த ஜெர்மனியை போரில் நேருக்கு நேர் சந்திப்பதை அமெரிக்கா தவிர்த்தே வந்திருக்கிறது என்று கூட சொல்லலாம். உலகின் சக்திவாய்ந்த நாடுகள் அனைத்தும் உலகப்போர்களின் இழப்பிலிருந்து மீண்டுவருவது குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கும் வேளையில், அதிகம் பாதிப்படையாமலிருந்த அமெரிக்காவோ உலகப்பேரரசாகும் கனவு கண்டது.

உலகப் பேரரசாகும் அமெரிக்காவின் கனவு:

1947இல் அமெரிக்க அயல் துறை அதிகாரியாக இருந்த அரசியல் ஆய்வாளர்கென்னன், உலகை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதனை அமெரிக்காவின் அதிகார வர்கத்தில் உள்ளோரிடம் சமர்பித்தார். அதன்படி, “உலகின் மக்கள் தொகையில் வெறும் 6% தான் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஆனால், உலகின் சொத்துக்களில் 50% அமெரிக்காவினுடையதாக இருக்கிறது. மீதமுள்ள 50% த்தான் மற்றனைத்து நாடுகளும் பங்குபோட்டுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்குமான இடைவெளி மேலும் அதிகரிக்க வேண்டும். 50% சொத்துக்கள் என்கிற எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உலக நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்தே இருக்கும். அமெரிக்காவினால் உலகைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அதுவே உதவும்” என்று எழுதினர். அக்காலகட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய அறிவுஜீவி என்றெல்லாம் கென்னன் புகழப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப்பினால், உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா புறப்பட்ட கதை நமக்குத்தெரியும். அதற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமன் ஆவார். ட்ரூமனின் கொள்கைகளைத்தான் அவருக்குப்பின்னால் வந்த அதிபர்கள் பின்பற்றினர். அப்படிப்பட்ட ட்ரூமனின் பல கொள்கைகளுக்கு விதையாக இருந்தது கென்னனின் ஆவணம்தான்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளரானஃபுகயாமா, உலகம் எவ்வாறு இருக்கப்போகிறது என்று தன்னுடைய நூலான “தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி”யில் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி, “அமெரிக்காதான் இனி உலகின் ஒரே பேரரசு. அமெரிக்கா தான் தொடர்ந்து உலகின் பேரரசாக இருக்கும். இதில் அமெரிக்காவோடு முரண்படுகிறவர்கள், வரலாற்றிலிருந்து தள்ளியிருக்கிறார்கள் என்று பொருள். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்கள் தற்கொலை செய்துகொண்டு சாகட்டும். ஒப்புக்கொண்டு அமெரிக்காவோடு அனுசரித்து இருப்பதே உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.” என்றார். ஃபுகயாமாவின் இந்நூல் மிகப்பிரபலமான நூலாகியது. உலகின் முற்போக்கு இயக்கங்கள் மற்றும் ஜனநாயக எண்ணங்கொண்டோர் அனைவரின் நம்பிக்கைகளை இந்நூல் சற்றே அசைத்துப்பார்த்தது என்றே சொல்லலாம்.

அமெரிக்காவின் மற்றொரு அரசியல் ஆய்வாளரானஹன்டிங்க்டன் என்பவர், ஃபுகயாமாவின் நூலை மறுத்து மற்றொரு ஆய்வு நூலை வெளியிட்டார். அதன்படி, “அமெரிக்காதான் ஒரே உலகப் பேரரசு என்று முரண்பாடுகள் இல்லாத உலகமாக இருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயமாக முரண்பாடுகள் இருக்கும். ஆனால், இம்முறை தத்துவங்களின் அடிப்படையில் அவை இருக்காது. அதற்கு பதிலாக, பண்பாடு மற்றும் நாகரிகங்களின் அடிப்படையில்தான் முரண்பாடுகள் இருக்கும்.” என்று சொன்னார். உலகை ஏழு நாகரீகப் பகுதிகளாகப் பிரித்து, அவற்றுக்கு இடையில்தான் போட்டிகளும் சண்டைகளும் முரண்பாடுகளும் இருக்கும் என்றார். ஏழு நாகரீகங்களில் மிகவும் தீவிரமான நாகரீகமாக இசுலாமிய நாகரீகம் இருக்கும் என்றும் அந்நூலில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் பிரெசின்ஸ்கீ. அவர் “தி கிராண்ட் செஸ்போர்ட்” என்ற நூலை எழுதினார். அந்நூலில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா எவ்விதமான தந்திரங்களைக் கையாண்டு உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாடாகத் திகழமுடியும் என்று மிகவிரிவாக எழுதியிருக்கிறார். தன்னுடைய நூலில், “அமெரிக்கா உலகையே ஆட்சி செய்வதற்கு, யூரோ-ஆசியா என்கிற புதிய தந்திரத்தை கையாள வேண்டும். யூரோ-ஆசியா தான் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக்கொண்ட பகுதிகளாகும். உலகின் 80% மக்கள் அங்குதான் வாழ்கின்றனர். அதிலும் ஆசியாவில் மட்டுமே 60% மக்கள் வாழ்கின்றனர். அதனால், யூரோ-ஆசியாவை யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்கள்தான் உலகை ஆளமுடியும். அதன்பிறகு, ஆப்பிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் கட்டுப்பாட்டில் தானாக வந்துவிடும். அதனால், யூரோ-ஆசியாவில் அமெரிக்காதான் மிகப்பெரிய சக்தியாக இருக்கவேண்டும். அமெரிக்காவுக்கு நிகரான மற்றொரு போட்டியாளர் அப்பகுதிகளில் உருவாகிவிடக்கூடாது. ஐரோப்பாவைப் பொருத்தவரையில், அமெரிக்கா கவனிக்கவேண்டிய நான்கு முக்கியமான நாடுகள் பிரான்சும், ஜெர்மனியும், போலந்தும், உக்ரைனும் ஆகும். இந்நான்கு நாடுகளை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால், ரஷியா மீண்டுமொரு சக்தியாக உருவாவதைத் தடுக்கலாம்.” கடந்த சில நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்களைப் புரிந்துகொள்ள நினைப்பவர்கள், இந்நூலை அவசியம் படிக்கவேண்டும்.  உலக நாடுகளின் மீது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஒரு போர்ப்பிரகடனம் இந்நூல் என்றே சொல்லலாம்.

சோவியத்யூனியன் –ரஷியா – திவால்வரலாறு:

கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்பதற்காக, அமெரிக்காவும் நேட்டோவும், ஐ.நா.சபையும் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த கோர்பச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.ஜெர்மனியின் இணைப்பிற்கு சோவியத் யூனியன் சம்மதித்தால், மத்திய ஐரோப்பாவைத் தாண்டி நேட்டோ படைகள் விரிவாக்கப்படமாட்டாதுஎன்று அமெரிக்கா அப்பேச்சுவார்த்தையில் வாக்குறுதி கொடுத்தது. பேச்சுவார்த்தையின் மிகமுக்கிய அம்சமாக இதுவே இருந்தது. ஆனால், கிழக்கு ஜெர்மனியை மேற்கு ஜெர்மனியுடன் இணைத்தபின்னரும், நேட்டோ படைகள் மத்திய ஐரோப்பாவைத் தாண்டி விரிவாக்கப்பட்டன. கார்பச்சேவுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதன்பிறகு சோவியத் யூனியன் உடைந்து போன வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதிலிருந்து பிரிந்த நாடுகளுக்கும் நேட்டோ பரவியது. போலந்தில் நேட்டோவின் ஏவுகணைத் தளம் கூட அமைக்கப்பட்டது.

சோவியத் யூனியன் சிதறுண்டதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறம் அம்மக்களை வாட்டிக்கொண்டிருந்தது. மற்றொருபுறம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சூறையாடல்கள் ரஷியாவில் நிகழ்த்தப்பட்டன. சோவியத் புரட்சி காலத்திலிருந்தே மக்களின் சொத்துக்களாக இருந்தவற்றையெல்லாம் மேற்குலக கொள்ளையர்கள் நுழைந்து, பல டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டு ரஷியாவிலிருந்து எடுத்துசெல்லப்பட்டுவிட்டன. இவையெல்லாம் யெல்சினின் ஆட்சிக்காலத்தில் நடந்தன.

சோவியத் யூனியன் உடைக்கப்பட்டால் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நம்பவைக்கப்பட்ட மக்கள் ஏமாந்துபோயினர். ஒரு கோடி குழந்தைகளுக்கு மேல் பிறந்தும், ரஷியாவின் பிறப்பு இறப்பு விகிதம் பூஜ்ஜியமாக மாறியது. அதாவது, சோவியத் யூனியன் உடைந்ததிலிருந்து,ரஷியாவில் பிறப்பவர்களைவிடவும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அதிலிருந்து ரஷியா மீளமுடியாமல் தவிக்கிறது.

அதே காலகட்டத்தில் ரஷியாவுக்கும் செசன்யாவுக்கு இடையில் நடந்த போரிலும், மேற்குலகின் பங்களிப்பு இருந்தன. இதனால், ரஷியா மேலும் வலுவிழந்து போனது. எல்சின் காலத்தில் ரஷியாவிற்குள் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களை ஒட்டுமொத்தமாக ரஷியாவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்பதில் மேற்குலகம் குறியாக இருந்தது. அதனால் செசன்யப் போரில் முஜாகிதீன் இயக்கங்கள் களமிறக்கப்பட்டன.

இவையெல்லாமுமாக சேர்ந்து, ரஷியா என்கிற நாடே உலகவரைபடத்தில் இல்லாமல் போகிற நிலை ஏற்பட்டது. பொருளாதார மந்தநிலை, தேசிய சொத்துக்கள் சூறையாடல், ஓய்வூதிய நிதியம் சூறையாடல், இயற்கை வளங்கள் சூறையாடல், அறிவியல் ஆய்வுகள் உள்ளிட்டவை நிறுத்தம், இராணுவம் வலுவிழந்தநிலை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட இயலாத நிலை என அழிந்துவிடும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டிருந்தது. அயல்நாட்டு கொள்ளையர்களுடன் இணைந்து பல சூறையாடல்களை நிகழ்த்திய உள்ளூர் கொள்ளையர்கள் ரஷியாவின் புதிய அதிகார சக்திகளாக உருவெடுத்தனர். அப்படியாக உருவானவர்கள் இயல்பாகவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதரவு சக்திகளாக இருந்தனர். ரஷியாவின் ஏழ்மை நிலைக்கு உதவி புரிவதாக சொல்லிக்கொண்டு, அமெரிக்காவிலிருந்து கிருத்துவ மிஷனரிகள் எல்லாம் வந்து குவியத் துவங்கினர்.

சர்வதேச அரங்கில் ரஷியாவின் மதிப்பும் மரியாதையும்கூட சரிந்து விழுந்தது. ரஷியாவின் நண்பர்களாக இருந்தவர்கள்கூட ரஷியாவிடமிருந்து தள்ளியிருக்கவே விரும்பினர். ஆப்பிரிக்காவில், மத்திய கிழக்கில் இருந்த எண்ணற்ற ரஷியாவின் நட்பு நாடுகள் அனைத்தும் ரஷியாவை விட்டு விலகிவிட்டன. ரஷியாவை மீட்டுக்கொண்டுவருவதற்கு சரியான ஆட்சியாளர்களும் இல்லை. பல நாடுகளில் இருந்த ரஷியாவின் தூதரகங்கள் கூட செயல்படாத நிலையில் இருந்தன. எவ்வித நோக்கமும் இல்லாத புதிய புதிய என்.ஜி.ஓ.க்களும் சிறுசிறு இயக்கங்களும் உருவாகின. ஆங்காங்கே அதிகாரத்தை அவர்களே எடுத்துக்கொண்டனர். ஒட்டுமொத்த ரஷ்யாவையும் கட்டுக்குள் கொண்டுவரும் அதிகாரம் யாரிடமும் இல்லாமல் போனது. சோவியத் யூனியன் உடைக்கப்பட்டு பல நாடுகள் பிரிக்கப்பட்ட பின்னரும், ரஷியா மிகப்பெரிய நாடாக இருக்கிறது என்று சொல்லியும், ஒவ்வொரு சிறுசிறு பகுதியும் தனிநாடு கோரும் கோரிக்கைகளை எழுப்பின. அவற்றை எழுப்பியவர்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் ஆதரவு குழுக்களாக இருந்தனர் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

முதல் பகுதி:

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 2

 அமெரிக்கா, அரசியல், உலகம், சிரியா February 24, 2016March 4, 2016  இ.பா.சிந்தன்

image

ஈராக் போரும்அமெரிக்காஎதிர்பாராதவிளைவும்:

அமெரிக்காவின் ஒரே போட்டியாளராக இருந்த சோவியத் யூனியன் அழிந்துவிட்டது என்பதால், உலகை ஆக்கிரமித்து அமெரிக்கப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவில் ஒரு இயக்கம் உருவானது. அமெரிக்காவின் சில அறிவுஜீவிகள் எல்லாம் இணைந்து உருவாக்கிய அவ்வியக்கித்தின் பெயர் “புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம்” (பிநேக்) ஆகும். ஏற்கனவே பல அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் சொன்னபடி மெதுவாக முயற்சித்தால் அமெரிக்கா அவ்வளவு சீக்கிரத்தில் பேரரசாக முடியாது என்றும், ஒரு சில நாடுகளில் நேரடியாக நுழைந்து ஆட்சி அதிரடியாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவ்வியக்கம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்கா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் 2001க்குப்பிறகு நுழைந்து போர்புரிந்தது. அமெரிக்காவின் பேரரசுக் கனவின் தந்தை என்று அழைக்கப்படுகிற கென்னன் (1947இல் அதற்கான ஆவணத்தை எழுதியவர்), ஈராக் போரின் துவக்கத்தின்போது 92 வயதில் இருந்தார். அவரே ஈராக் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்துக் குரல் கொடுத்தார். இப்போரினால் அமெரிக்கா பலமிழந்த நாடாகத்தான் மாறும் என்றும் இப்போருக்குப் பின்னால் அமெரிக்காவிற்கு சமமான எதிரிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்றும் அவர் அமெரிக்காவை எச்சரித்தார்; ஈராக் போரை எதிர்த்தார். ஆனால் பினாக்கோ அவருக்கு மறுப்பு தெரிவித்தது. போரினை நிறுத்திவிட்டு, மித்திய கிழக்கை வேடிக்கையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றது. “அகண்ட மத்திய கிழக்கை”அமெரிக்கா வெகு சீக்கிரத்தில் உருவாக்கி தனது கட்டுக்குள் வைக்கவேண்டிய நேரமிது என்றது பினாக் குழு. அகண்ட மத்திய கிழக்கு என்பது ஆப்கானிஸ்தானில் துவங்கி ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கியது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு ஆப்பிரிக்காவையும் இதிலே இணைக்கும் கனவையும் கொண்டிருந்தது “அகண்ட மத்திய கிழக்கு” திட்டம். அங்கெல்லாம் தான் உலகின் மிக அதிகமான எண்ணை வளங்கள் புதைந்துகிடக்கின்றன. உலகில் பெட்ரோல் தேவைப்படாத நாடே இருக்கமுடியாது என்பதால், பெட்ரோல் கிடைக்கிற எல்லா நாடுகளையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டாலே அமெரிக்கா பேரரசாவது உறுதி என்றது பினாக் குழு.

எல்சினுக்குப் பிறகு ரஷியாவின் அதிபராக புடின் பதவியேற்றார். புடின் பதவியேற்ற காலகட்டத்திலும் மிகப்பெரிய கடனில்தான் இருந்தது ரஷியா. 200 பில்லியன் டாலர் கடனோடு, திவாலான தேசமாகவே இருந்தது. உலகிலேயே மிக அதிகமான இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும், ஏழை தேசமாக இருந்தது. சோவியத் உடைந்தததற்கும் புடின் அதிபரானதற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு மறைமுகப் போட்டியாக ஐரோப்பாவில் ஜெர்மனி வளர்ச்சியடைந்திருந்தது. பொருளாதார வல்லமை பெற்ற நாடாக ஜெர்மனி உருவாகியிருந்தது. சோவியத் யூனியன் காலத்தில் கிழக்கு ஜெர்மனியில் புடின் பணியமர்த்தப்பட்டிருந்தார். புடினால் சரளமாக ஜெர்மன் மொழியும் பேசமுடியும் என்பதால் ஜெர்மனோடு நெருங்கிய உறவு இருந்தது. அதன் காரணமாக அதிபராவதற்கு முன்னரே, ரஷிய-ஜெர்மன் கூட்டக் குழுவின் இணைத்தலைவராக புடின் இருந்துவந்தார். அதனால் ஜெர்மனியொடான உறவினை மேலும் நெருக்கமாக்கினால் அது ரஷியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பதை புடின் புரிந்துவைத்திருந்தார். அரபுலக நாடுகளின் எண்ணை வளத்தை அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காரணமாகவும், டாலரால் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொள்ளமுடியும் என்பதாலும், அரபுலகத்தில் கிடைக்கும் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணைப் பொருட்கள், “டாலர் ஆயில்” என்றே அழைக்கப்படுகின்றன. ஜெர்மனிக்கு டாலரைப் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்வதில் விருப்பமில்லை. தனக்கென தனியான எரிசக்தித் திட்டம் வேண்டுமென்று வெகுநாட்களாகவே ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது ஜெர்மனி.

ஜெர்மனியின் விருப்பம் ஒரு பக்கமிருக்க, ரஷிய அதிபரான புடினோ அதனை சாதகமாக்கிக்கொள்ள மறுபுறம் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஜெர்மனியோடு சிலப்பல பேச்சுவார்த்தைகளையும் நடத்தியும் வந்தார். 2003இல் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நுழைந்து நிகழ்த்திய போர் குறித்து நாம் அறிவோம். எண்ணை வளமிக்க மத்திய கிழக்கு நாடான ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகத்தான் அமெரிக்கா அப்போரினை நடத்தியது. அப்போரினால் அமெரிக்காவே எதிர்பார்க்காத ஒரு விளைவு ஏற்பட்டது. அதுதான் ரஷியாவின் வளர்ச்சி. அதெப்படி சாத்தியமானது? ஆம், ஈராக் போரின்போது பெட்ரோலியப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பெட்ரோலின் விலை 35 டாலராக இருந்தது. ஈராக்கின் ஃபல்லுஜாவில் அமெரிக்காவின் கப்பல்களை ஈராக்கியப்படையினர் தாக்கிய அதே நாளில், 75 டாலராக பெட்ரோலின் விலை உயர்ந்தது. ஈராக்கை மிக எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்த அமெரிக்காவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

கடுமையான மற்றும் நீண்ட எதிர்ப்பினை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருந்தது. ஈராக் போரினால், உலகில் எண்ணை உற்பத்தி செய்யும் பல நாடுகள் இலாபமடைந்தன என்பது அமெரிக்காவே எதிர்பார்க்காத திருப்பம். ஈராக் போருக்கு முன்னர், வெனிசுவேலா, லிபியா, அல்ஜீரியா போன்ற பல நாடுகள் மிகப்பெரிய கடனில் திவாலாகிக்கிடந்தன. ஈராக் போருக்குப்பின்னர் அவர்களது இமாலயக் கடன்கள் தீர்ந்தன. தன்னுடைய சுயநலத்திற்காக அமெரிக்கா நடத்திய ஒரு போரினால், ரஷியா என்கிற திவாலாகியிருந்த நாடு மீண்டெழுந்தது. பெட்ரோலியப் பொருட்களை ரஷியாவிடமிருந்து ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வாங்கின. சர்வதேச சந்தையில் விலையும் அதிகரித்தமையால், ரஷியாவிற்கு பெருத்த இலாபம் கிடைத்தது. பொருளாதார சரிவிலிருந்து ரஷியாவும் மீண்டது. ஈராக் போரின் உச்சகட்ட ஆண்டுகளான 2003 முதல் 2008 வரையில் மட்டுமே ரஷியா தனது கடன்களை அடைத்துவிட்டது. சோவியத் யூனியன் சிதைவுண்டபின்னர் எல்சின் காலத்தில் ரஷியா என்கிற நாடு இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. கடன்சுமையும், வறுமையும் ஆட்கொண்டிருந்தமையால், ஒருங்கிணைந்த தேசமாக செயல்படமுடியாமல் இருந்தது. ஆனால் புடின் காலத்தில், ஈராக் போரின் எதிர்பார்க்காத விளைவாக, ரஷியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து செயல்படத்துவங்கியது.

டாலர் ஆயிலிலிருந்து பெறவேண்டும் என்கிற புள்ளியில் ரஷியாவும் ஜெர்மனியும் இணைந்துவிட்டன. ரஷியாவிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு எரிவாயுவையும் எரிசக்தியையும் எடுத்துச்செல்ல ஏராளமான குழாய்கள் பூமிக்கடியில் போடப்படப்பட்டன. அதில் பல குழாய் இணைப்புகள் உக்ரைன் வழியாக செல்கின்றன. உக்ரைனில் எதற்காக குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன, ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை மாற்ற அமெரிக்கா எதற்காக முயற்சிக்கிறது என்பதையெல்லாம் இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ரஷியாவுக்கு மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரே நட்பு நாடான சிரியாவின் வழியாகவும் மற்றொரு குழாய் இணைப்புத்திட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனையும் நாம் இணைத்தே சிரியாவின் பிரச்னையை அணுகவேண்டும். 2007 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 39% இயற்கை எரிவாயுவையும் (100 மில்லியன் டன்), 33% எரிசக்தி எண்ணையையும் (185 மில்லியன் டன்) ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது ஐரோப்பிய யூனியன். இதில் பெரும்பகுதியினை ஜெர்மனிதான் இறக்குமதி செய்து பயன்படுத்தியிருக்கிறது.

ரஷியாவின் எதிர்பாராத வளர்ச்சி ஒருபுறமிருக்க, அமெரிக்கா இழந்ததோ ஏராளம். தன்னுடைய மக்களின் 75 ஆண்டுகால சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் பணத்தை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் செலவு செய்து இழந்திருக்கிறது அமெரிக்கா. ஈராக்கிலோ அமெரிக்காவிலோ பெருமைப்பட்டுக்கொள்கிற வெற்றியையும் அமெரிக்கா பெறவில்லை. போருக்கு முந்தைய நிலையைவிட மிகமோசமான அளவிற்கு குழப்பங்களும் தீவிரவாத செயல்களும் நடைபெறுகிற தேசங்களாகத்தான் அவை மாறியிருக்கின்றன. ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் போர் மூலம் ஆக்கிரமித்துவிட்டால், அகண்ட மத்திய கிழக்கு தனது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்றும் உலகின் பேரரசாக அமெரிக்கா உருவாகிவிடும் என்று கணக்குப்போட்ட அமெரிக்காவிற்கு தோல்விதான். ரஷியாவும் தலைதூக்கத்துவங்கிவிட்டது.

சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்திருந்தது.சீனா ஒரு ஆமையைப்போன்று முன்னேறியது. ஆமையென்றாலே மிகவும் மெதுவாக மட்டுமே முன்னேறும் என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால், ஆமை தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் முன்னால் கவனமாக இருபுறமும் பார்க்கும்.ஏதாவது பிரச்சனை தென்பட்டால், ஓரடி பின்னால் சென்று தன்னுடைய திசையினை மாற்றிக்கொண்டு, மீண்டும் கவனமாக நடைபோட்டு முன்னேறும். பனிப்போர், வியட்நாம் போர், ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் என்று தவறு மேல் தவறாக செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஆமை போல மிகக்கவனமாக அடிமேல் அடியெடுத்து முன்னேறி, சீனா மிகப்பெரிய பொருளாதார பேரரசாக உருவெடுத்துவிட்டது. இதனையும் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கு ஆசியப் பொருளாதாரம்தான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பகுதியாக மாறியிருக்கிறது. சீனா, இந்தியா, கொரியா என அந்த பட்டியல் நீளமாகியிருக்கிறது. அதற்குள், பிரேசிலும் இன்னபிற தென்னமெரிக்க நாடுகளும் மெல்ல மெல்ல விழுத்துக்கொண்டு முன்னேறத்துவங்கிவிட்டன.

மத்திய கிழக்கை மட்டுமே கவனத்தில் வைத்துக்கொள்வது போதாது என்றும், ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதை அமெரிக்கா விளங்கிக்கொண்டது. அதிலும் அமெரிக்காவிற்கு பெரிய போட்டியாளர்களாக உருவாகியிருக்கும் ரஷ்யாவையும் சீனாவையும் சுற்றிவளைப்பதும் அவர்களை மேலும் வளரவிடாமல் தடுப்பதும் அவசியம் என்றும் தீர்மானித்தது அமெரிக்கா. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஈராக்கிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது அமெரிக்கா. சீனாவுக்கு அருகில் தனது படைகளை தென்கொரியாவில் அதிகரித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்த தென்-வட கொரிய நாடுகளுக்கிடையில் சண்டையினை அதிகரித்ததும், அதனைத்தொடர்ந்து தென்கொரியாவில் அமெரிக்கப் படைகளை அதிகரித்ததும் சீனாவைக் குறிவைத்தே நடத்தப்பட்டன. ரஷ்யாவைக் குறிவைப்பதற்காக நேட்டோவை ஐரோபாவிய நாடுகள் பலவற்றிலும் விரிவாக்கம் செய்துகொண்டே ரஷ்யாவின் எல்லைவரை கொண்டுசென்றது அமெரிக்கா. ரஷியாவின் மற்றொரு எல்லையில் இருக்கும் ஜார்ஜியாவுக்கு நேட்டோவைப் பரவச்செய்து அங்கேயும் நேட்டோவின் ஏவுகணைத் தளத்தை அமைத்தது அமெரிக்கா. அதனால் நிகழ்ந்த முரண்பாடுகளினால், ரஷிய-ஜார்ஜியா எல்லையில் இருக்கும் இரண்டு பகுதிகளில் தனிநாடு கோரிய அம்மக்களின் கோரிக்கைகளை ரஷியா அங்கீகரித்தது. அப்காசியா மற்றும் தெற்கு ஒஸ்சசேசியா ஆகிய அந்நாடுகளை இன்றுவரை ஜார்ஜியாவோ அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை.

2008இல் துவங்கிய வங்கித்துறை நெருக்கடிகளினால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. அதன் விளைவாக, ரஷியா உள்ளிட்ட எண்ணை தயாரிக்கும் பிற நாடுகளும் பாதிப்புக்குள்ளாயின. அக்காலகட்டத்தில் யூரோ-ஆசியப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான ஏராளமான ஆலோசனைகளை நடத்திவந்தது ரஷியா. அமெரிக்கா ஆட்டங்கண்டால், யூரோ-ஆசியக் கண்டத்து நாடுகளும் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்துகொண்டிருப்பதை தடுத்துநிறுத்தும் நோக்கிலேயே இப்படியான யூரோ-ஆசியா திட்டம் விவாதிக்கப்பட்டு வந்தது. அதேகேற்றாற்போல் மெதுமெதுவாக வளர்ந்துவந்த ஷாங்காய் கார்ப்பரேசனை ரஷியா நன்கு பயன்படுத்திக்கொண்டது. ரஷியா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ கூட்டமைப்புதான் ஷாங்காய் கார்ப்பரேசன். 2015 ஜூலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானும் இவ்வமைப்பில் இணைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா உள்ளிட்ட நாடுகள் பார்வையாளராக தற்போது இருக்கின்றனர். இலங்கை, நேப்பாளம், கம்போடியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளும் இதில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றன. நேட்டோ, ஐ.எம்.எப்., உலக வங்கி மற்றும் ஐ.நா.சபை போன்ற பல அமைப்புகளுக்கு போட்டியான ஓரமைப்பாக இது உருவாகிவிடுமோ என்கிற அச்சம் அமெரிக்காவிற்கு உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஐரோப்பிய யூனியனைப் போல் ஆசிய யூனியனாக இது உருவெடுத்துவிடுமோ என்கிற பயமும் அமெரிக்காவிற்கு இருக்கிறது.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 3

 அமெரிக்கா, அரசியல், இஸ்ரேல், உக்ரைன்,உலகம், சவுதி அரேபியா, சிரியா February 26, 2016March 4, 2016  இ.பா.சிந்தன்

image

சீனாவைஅமெரிக்காசுற்றிவளைத்ததுஎப்படி?

சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இராணுவ முயற்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. சீனாவுக்கும் அதன் அருகிலிருக்கும் நாடுகளுக்குமிடையிலான எல்லையோரத் தகராறுகளையும், மீன்பிடி உரிமைகளில் இருக்கும் முரண்பாடுகளையும், சில தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் பிரச்சனைகளையும் அமெரிக்கா நன்கு ஆராய்ந்து அப்படியான முரண்பாடுகளை பெரிதுபடுத்தி, அவர்களோடெல்லாம் போலியான நட்புறவை ஏற்படுத்திக்கொண்டது அமெரிக்கா. வியட்நாம், புருனே, பிலிப்பைன்ஸ், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளோடு தந்திரமான உறவை ஏற்படுத்திக்கொண்டு, அங்கெல்லாம் இராணுவ தளவாடங்களை அமைத்திருக்கிறது அமெரிக்கா. வடகொரியாவும் ஆபத்துமிகுந்து நாடு என்கிற பயத்தை உருவாக்கியும், தன்னுடைய கருத்திற்கு மேலும் வலுசேர்த்தது அமெரிக்கா.

சீனாவின் மேற்குப் பகுதியில் சிஞ்சியாங் மாகாணம் இருக்கிறது. மத்திய ஆசியாவுடன் சீனாவை இணைக்கும் பகுதி இதுதான். இம்மாகாணத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட துருக்கி மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். சீனாவின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிக்கும், பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்திற்கும் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருப்பதால், அவர்களின் முரண்பாடுகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு அவர்களின் மூலமாக சீனாவுக்கு எதிரான கலகங்களை விளைவிக்கிறது அமெரிக்கா. சிஞ்சியாங் மாகாணத்திற்கு அருகிலேயே அமெரிக்காவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தான் இருப்பதால், அமெரிக்காவிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு சீனாவுக்கு இருக்கும் நட்புநாடு பாகிஸ்தான் தான். வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுடன் சீனாவுக்கு இருக்கும் உறவினை இதற்காக பயன்படுத்திகொள்கிறது சீனா.

பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணைப் பொருட்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மல்லாக்கா கால்வாய் வழியாகத்தான் சீனா இறக்குமதி செய்துவருகிறது. அக்கால்வாயின் நுழைவுவாசலானது இந்தோனேசியாவின் அச்சே என்கிற துறைமுகத்தில்தான் இருக்கிறது. அச்சேவில் 2004இல் தெற்காசியாவை உலுக்கிய சுனாமியால் அமெரிக்காவிற்கு ஒரு ஆதாயம் கிடைத்தது. சுனாமியால் கடுமையாக பதிக்கப்பட்ட அச்சேவில் மீட்புப் பணியினை நடத்துவதற்காகச் சென்ற அமெரிக்கா, அங்கே நிரந்தரமாக ஒரு இராணுவத் தளவாடத்தை அமைத்துவிட்டது. சீனாவிற்கு எண்ணை எடுத்துச்செல்லும் கப்பல்களை தடுத்துநிறுத்த வேண்டுமென்றால், மல்லாக்கா கால்வாயை அச்சேவில் அடைத்துவிட்டாலேபோதும். சீனா ஒரே நாளில் ஆட்டங்கண்டுவிடும் என்கிற அளவிற்கு மல்லாக்கா கால்வாயும், அச்சே துறைமுகமும் முக்கியத்துவம் பெற்றவை. அச்சே நகரத்தில் அமெரிக்கா தனது  இராணுவத் தளவாடத்தை அமைத்ததும் இதனை மனதில் வைத்துத்தான். அதனாலேயே பாதுகாப்பு நடவடிக்கையாக, சீனா அப்பாதையில் சில நாடுகளுடன் நட்பினை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் பாகிஸ்தானின் கட்வார் துறைமுகத்திலும், இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலும், வங்காளதேசத்திலும் எரிபொருள் நிரப்புவதற்கென தனது கப்பல்களை நிறுத்திக்கொள்ள சீனா அனுமதிபெற்றிருக்கிறது.

சீனாவுக்கு இறக்குமதியாகும் பெட்ரோலியப்பொருட்களில் 70% வரை மல்லக்கா கால்வாய் வழியாகத்தான் வருகிறது. அதனால் சீனாவுக்கு இப்பாதை மிகவும் முக்கியமானதாக இருந்துவருகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நட்புபாராட்டுவதும் ஒருவகையில் அமெரிக்காவின் தந்திரத்திற்கு பதிலடிகொடுக்கும் நோக்கில்தான். சீனாவின் உதவிகளைப் பெறுவதாலேயே, பாகிஸ்தானில் அவ்வப்போது ஆளில்லா ஏவுகணைகளை வீசுவதும், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கி குழப்பங்களை விளைவிப்பதுமாக இருக்கிறது அமெரிக்கா. இலங்கையில் ஈழக் கோரிக்கையினை ஆதரிப்பதுபோன்று நடித்து வெற்றுத் தீர்மானங்களை ஐ.நா.சபையின் பொதுச்சபையில் கொண்டுவந்து, அவ்வப்போது அமெரிக்கா பூச்சாண்டி காண்டுவதும் இதே காரணத்திற்காகத்தான். சீனாவின் கப்பல்களை இலங்கையின் கடற்தளத்தில் அனுமதிக்காமல் அதற்கு பதிலாக அமெரிக்கக் கப்பல்களை அனுமதிப்பதாக இலங்கை அரசு அறிவிக்குமாயேனால், அடுத்தகணமே ‘ஈழம்’ என்கிற வார்த்தையையே அமெரிக்கா மறந்துவிடுவது உறுதி.

ரஷியாவைஅமெரிக்காசுற்றிவளைத்ததுஎப்படி?

வியாபாரத்திற்கும் வாணிபத்திற்கும் மேற்குலகை மட்டும் நம்பியிருக்கமுடியாது என்பதை உணர்ந்த ரஷியாவும் ஆசியப்பகுதியிலேயே நண்பர்களைத் தேடியது. அதனாலேயே கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நட்புறவும் வளர்ந்தது.

சோவியத் யூனியன் காலத்திலேயே ஆப்பிரிக்கா மற்றும் கியூபாவிலிருந்து சோவியத் யூனியனை விரட்டியடிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் மிகமுக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்காக 1976இல் சஃபாரி கிளப் என்றொரு புலானாய்வுத் துறையினை ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, மொரோக்கா மற்றும் பிரான்சு நாடுகள் இணைந்து உருவாக்கினர். அக்குழுவிற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ., இஸ்ரேலின் மோசாட்  மற்றும் பிரிட்டினின் உளவுத்துறை ஆகியன ஆதரவு வழங்கின. ஆறு வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் அனைவரும் சந்தித்துக்கொண்டனர். கம்யூனிச எதிர்ப்புதான் அதன் மையக் குறிக்கோளாக இருந்தது. 1960-70 களில் ஆப்பிரிக்காவில் உருவாகியிருந்த ஜனநாயக மற்றும் கம்யூனிச ஆதரவு மனநிலையை வளரவிடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆங்காங்கே குழப்பங்கள் விளைவிப்பதும், ஆயுதங்களை வழங்கி ஆட்சிக்கலைப்பு நடத்துவதுமே அக்குழுவின் தலையாய பணியாக இருந்தது. கியூபாவில் வெற்றிபெற்ற புரட்சி ஆப்பிரிக்காவின் அங்கோலா வரை பரவியிருந்ததை தடுப்பதற்காக, அங்கோலாவைக் குறிவைத்து பல நடவடிக்கைகளை சஃபாரி கிளப் எடுத்தது. சோவியத் யூனியன் உடைந்தபிறகும் ரஷியா ஒரு தோல்வியடைந்த தேசமாக சர்வதேச அரங்கில் பார்க்கப்பட்டபோதும், ரஷியாவிற்கு ஆப்பிரிக்காவில் நண்பர்களென என யாருமே மிச்சமிருக்கவில்லை. மேற்குலக நாடுகளால் துண்டாடப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளும் அதற்குத் தப்பவில்லை. இஸ்ரேலும் துருக்கியும் அமெரிக்காவின் துணை நாடுகளாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டன.

ரஷியாவின் சட்டப்படி இரண்டு முறைக்குமேல் யாரும் தொடர்ந்து அதிபராக இருக்கமுடியாது என்பதால், 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் புடினால் போட்டியிடமுடியவில்லை. அதனால், அவரின் சீடர் என்றே அழைக்கப்பட்ட டிமிட்ரி மெட்வெடெவ் என்பவரை அதிபர் தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றிபெற வைத்தார் புடின். டிமிட்ரி எப்போதும் புடினின் பேச்சைக்கேட்டே நடந்தார் என்றாலும், மேற்குலக நாடுகளின் போட்டியினை உறுதியாக சமாளிக்கும் திறனற்றவராக இருந்தார். மேற்குலக நாடுகளுடன் சற்று சமாதானமாகப் போனால், ஏதேனும் ஆதாயம் கிடைக்கலாம் என்றும் டிமிட்ரி நம்பினார். இதனால், எண்ணை வளமிக்க லிபியா மீது போர் தொடுக்கும் தீர்மானத்தை ஐ.நா. சபையில் ரஷியாவின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அத்தீர்மானத்தை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைக்கொண்டு முறியடித்திருக்க வேண்டும் என்பது புடினின் கருத்தாக இருந்தது. அப்படி ரஷியா செய்திருந்தால், கடந்த 4 ஆண்டுகளின் வரலாறே வேறு மாதிரியாக இருந்திருக்கும். 2012இல் நடந்த ரஷிய அதிபர் தேர்தலில், மீண்டும் புடின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்று அதிபரானார்.

ரஷியாவின் நட்பு நாடாக மெடிட்டரேனியன் கடற்பகுதியில் இருக்கும் ஒரே நாடு சிரியா மட்டும்தான். சிரியாவின் துறைமுகத்தைத் தவிர வேறெங்கும் ரஷியாவினால் இன்று தன்னுடைய கப்பலை நிறுத்தமுடியாத அளவிற்கு அமெரிக்காவின் ஆதிக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படாத பகுதியே உலகில் இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அமெரிக்காவினால் எந்தவொரு நாட்டினையும் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மிரட்டமுடியும் என்றாகியிருக்கிறது. சோவியத் காலத்திலிருந்தே ரஷியாவுக்கும் சிரியாவுக்கும் இடையில் மிகநெருக்கமான உறவு இருந்துவருகிறது. அதனை எப்படியாவது உடைத்தெறியவேண்டும் என்பதும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக சிரியாவைச் சுற்றி ஒரு வளையத்தை திட்டமிட்டே அமெரிக்கா ஏற்படுத்திவந்திருக்கிறது. இதனை ரஷியா நெருக்கடியிலிருந்த போது தடுக்கமுடியாமல் போனதால், அந்த வளையம் சிரியாவை நெருங்கி அருகில் வந்திருக்கிறது.

இஸ்ரேலில் ஒரு ஏவுகணைத் தளவாடம், துருக்கியில் ஒரு ஏவுகணைத் தளவாடம், சவுதி அரேபியாவின் உதவியோடு கல்ஃப் பகுதியில் ஒரு ஏவுகணைத் தளவாடம் என்று அமெரிக்கா உருவாக்கிவிட்டது. இப்படியாக அமைக்கப்பட்ட ஏவுகணைத் தளவாடங்கள் ஒருபக்கம் சிரியாவையும் ஈரானையும் தன்னுடைய கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நேட்டோவின் ஊடாக அமைத்திருக்கிறது அமெரிக்கா. இதன்மூலம் ரஷியாவின் மீதமிருக்கிற நட்பு நாடுகளையும் இல்லாமல் செய்துவிடுவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது. சிரியாவை மட்டும் இல்லாமல் செய்துவிட்டால், மத்திய கிழக்கில் சிரியாவுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஈரானுக்கு துணையில்லாமல் போய்விடும். அதன்பிறகு துருக்கி, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்காவின் தலையாட்டி தேசங்களின் உதவியோடு ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஆட்டிப்படைக்கலாம்; எண்ணை வளத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்; ரஷியா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை சிதைக்கலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம். சிரியாவை இல்லாமல் செய்துவிடுவது, அல்லது சிரியாவை சிலப்பல நாடுகளாக உடைத்துவிடுவது, அல்லது சோமாலியாவைப் போன்ற நிலையற்ற அரசுகொண்ட நாடாக சிரியாவை மாற்றுவது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செய்துமுடித்துவிட்டால், தனது திட்டம் நிறைவேறிவிடும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். இதுதான் சிரியாவைச் சுற்றி இவ்வளவு நாடுகள் வட்டமிடுவதற்குக் காரணம். இப்படிப்பட்ட திட்டம் ஏற்கனவே லிபியாவில் நிறைவேற்றப்பட்டது என்பதால், அதனையே சிரியாவிலும் நடைமுறைப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.

சிரியாவை இல்லாமல் செய்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டப்பின்னர், அதற்கான வழி மிக எளிதாகத் தோன்றியது அமெரிக்காவிற்கு. சிரிய பாத் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டாலே போதும் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா. அதற்காக மிகவும் பிற்போக்கான தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி அரசுக்கு எதிரான கலகங்களை ஏற்படுத்திப்பார்த்தது. சவுதி அரேபியா மூலமாக ஆயுதங்களை வழங்கியும், துருக்கி வழியாக பயங்கரவாதிகளை அனுப்பியும் அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. யாருடைய நலனுக்காக சிரியாவை ஆக்கிரமிக்க நினைக்கிறோம் என்றுகூட தெரியாத சில ஆயுதக்குழுக்களும் இதில் அடங்கும். ஸ்லீப்பர் செல்களைப்போன்று, ஸ்லீப்பர் பயங்கரவாத இயக்கங்கள் அவை என்றுகூட சொல்லலாம். தனது நாட்டின் சிறைகளில் இருக்கும் மரண தண்டனைக்கைதிகள் பலரை மூளைச்சலவை செய்தும் அவ்வியக்கங்களுக்கு சவுதி அரேபியா அனுப்பியதற்கான ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன. இப்படியாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்த இயக்கங்கள் இணைந்தே ஐ.எஸ்.ஐ.எஸ்.ஆக உருமாறியிருக்கின்றன. சிரியாவை அழிப்பதற்கோ உடைப்பதற்கோ ஆக்கிரமிப்பதற்கோ துருக்கி உதவுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. நெசவுத்தொழிலில் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக சிரியாதான் இருந்துவருகிறது. துருக்கிக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பதும் சிரியாதான். அதனால் சிரியாவை வீழ்ந்துபோவதை துருக்கி விரும்புகிறது. சிரியா வீழ்வதன்மூலம், தனது பொருளாதாரம் மேம்படும் என்பது துருக்கியின் கணக்கு. அதற்கேற்றாற்போல், சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த நெசவாலைகள் பிரித்தெடுக்கப்பட்டு துருக்கியின் சந்தையில் தான் விற்கப்படுகின்றன.

ரஷியாவுடன் எல்லையைக்கொண்டிருக்கும் ஜார்ஜியாவில் ஏவுகணைத் தளவாடம் அமைப்பதன்மூலம் ரஷியாவுக்கு மற்றொரு பக்கத்திலிருந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா முனைந்தது. ஆனால், அங்கே ரஷியாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சிறிய தேசங்களால் அது நடக்காமல் போனது. அதன்பிறகுதான், உக்ரைன் பக்கமாக தனது கவனத்தைத் திருப்பியது அமெரிக்கா. “தி கிராண்ட் செஸ்போர்ட்” என்கிற நூலில், அமெரிக்கா கவனம் செலுத்தவேண்டிய மிகமுக்கியமான எல்லை உக்ரைன்தான் என்று பிரெசின்ஸ்கீ குறிப்பிட்டிருந்தார். அதன்படி, உக்ரைனில் நேட்டோவை நுழையச்செய்து ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. மிகப்பெரிய நிலப்பரப்பையும், அதிகளவிலான விவசாய நிலங்களையும் கொண்ட நாடு உக்ரைன். ஏற்கனவே உக்ரைனின் 92 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள், பிரிட்டனின் வேளாண் நிறுவனங்களின் வசம்தான் இருக்கின்றன. இதற்குமேலும் நேட்டோவையோ அமெரிக்காவையோ இன்னபிற மேற்குல நாடுகளையோ நுழையவிட்டால், பெரும் ஆபத்து என்பதால் ரஷியாவின் ஆதரவுப் பகுதியான கிரிமியாவை சுயாட்சிப் பிரதேசமாக அங்கீகரித்தது ரஷியா. கிரிமியாவை மட்டும் இழந்துவிட்டால், ரஷியாவுக்கென்று ஒரேயொரு கப்பற்படைத் தளம்கூட இல்லாமல் போய்விடும். அதன்பிறகு ரஷியாவை வீழ்த்துவதும் கட்டுக்குள் வைப்பதும் அமெரிக்காவிற்கு மிக எளிதானதாக மாறிவிடும். ஒருபுறம் சிரியாவை இழந்தால், அங்கேயிருக்கும் கப்பற்படைத்தளத்தை ரஷியா இழக்கநேரிடும்; மறுபுறம் கிரிமியாவை (உக்ரைன்) இழந்தால், அங்கேயிருக்கும் கப்பற்படைத்தளத்தையும் ரஷியா இழக்கநேரிடும். அதனால் உக்ரைனும், கிரிமியாவும், சிரியாவும் ரஷியாவுக்கு வாழ்வா சாவா போராட்டம்.

இப்பின்னனியினை அறிந்துகொண்டால், சிரியாவையும், உக்ரைனையும், கிரிமியாவையும் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் ரஷியா ஒரு ஏகாதிபத்திய நாடாக இவற்றைச் செய்யவில்லை என்பது நமக்கு நன்கு விளங்கும். அப்பகுதிகளை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துவது ரஷியாவின் நோக்கமல்ல என்றும் தன்னுடைய பாதுகாப்பையும் தன்னுடைய நண்பர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கே ரஷியா போராடிக்கொண்டிருக்கிறது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.

சிரியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் பாசிச பயங்கரவாத அமைப்புகளில் 8000 பேர் செசன்யா பகுதிகளிலிருந்து வந்தவர்களாவர். ஒருவேளை சிரியாவில் நடக்கும் போரில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வெற்றிபெற்றால், அவர்கள் ரஷியாவின் செசன்யா பகுதிகளுக்குச் சென்று அங்கேயும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கப்போவது உறுதி. அதற்கான எல்லா முகாந்திரமும் இருக்கின்றன. ரஷியாவின் மிகப்பெரிய மற்றொரு கவலை இதுதான். எல்லைகள் வரை வந்திருக்கும் பிரச்சனைகள், அதன்பிறகு நாட்டிற்குள்ளும் வந்துவிடும். அதையே காரணம் காட்டி, ரஷியாவுக்குள்ளும் குண்டுகள் வெடிக்கும், நேட்டோ உள்நுழையும், ஐ.நா.சபை தலையிடும்; இறுதியில் ரஷியாவே நிலைகுலைந்து போவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன என்று ரஷியா அஞ்சுவதில் நியாயமிருக்கிறது. சிரியாவுக்கு ரஷியா உதவுவதற்கு இதுவும் மற்றொரு காரணம்.

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 4

 அமெரிக்கா, அரசியல், இஸ்ரேல், சவுதி அரேபியா,சிரியா, தொடர்கள் March 19, 2016 இ.பா.சிந்தன்

image

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இதற்கு முந்தைய போர்களை விடவும் குழப்பமான சூழல் சிரியாவில் நடக்கும் போரில் நிலவுகிறது. தேசிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இராணுவம் ஒரு புறமும், அதனை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் இன்னொரு புறமும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டனர். எகிப்து மற்றும் துனிசியாவைப் போன்றே சிரியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவில் துவங்கிய உள்நாட்டுக் குழப்பங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். ஆனால், சிரியாவின் அரசினை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிடமுடியாது என்பதை புரிந்தகொண்டபின்னர், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரான்சு, துருக்கி, கத்தார் மற்றும் இன்னபிற முஜாகிதின் அமைப்புகள் அனைத்தும் களத்தில் இறங்கின. அவர்களது ஆதரவுடன் செயல்படத்துவங்கிய “ஃபிரீ சிரியன் ஆர்மி” என்கிற தீவிரவாத அமைப்பு களத்தில் இறங்கியதும் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவ்வளவு பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இயங்கிய அந்த அமைப்பாலும் சிரிய அரசை கவிழ்த்துவிடமுடியவில்லை. அதன்பின்னர் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற படுபயங்கரவாத அமைப்பு சிரியாவின் உள்நாட்டுப்போரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்தது. திடீரென இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். எங்கிருந்து வந்தனர் என்பதையெல்லாம் சர்வதேச நாடுகளோ ஊடகங்களோ எந்தக்கேள்வியும் பெரிதாக எழுப்பவில்லை. சவுதி அரேபியாவின் மரணதண்டனைக்கைதிகள் சில ஆயிரம் பேருக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ். என்று சொல்லப்படுகிற வாதங்களையும், முன்வைக்கப்படுகிற ஆதாரங்களையும் புறந்தள்ளிவிடமுடியாது. அமெரிக்க ஆதரவு “ஃப்ரீ சிரியன் ஆர்மி” யிடம் வழங்கப்படும் ஆயுதங்கள் எல்லாம் இறுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். வசமே சென்று சேர்வதைப் பார்க்கமுடிகிறது. நேட்டோ படைகளின் ஆயுதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன என்றுசர்வதேச பொதுமன்னிப்பாயம் அமைப்பு அறிக்கையொன்றையேவெளியிட்டிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக்கிரமித்து வைத்திருக்கிற எண்ணைகிணறுகளில் இருந்து எடுக்கப்படுகிற எரிபொருளை யார் யாரெல்லாம் வாங்குகிறார்கள்? எப்படியெல்லாம் வியாபாரம் நடக்கிறது? எந்தப் பாதையில் எல்லாம் கொண்டுசெல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது என்பதை எல்லாம் ஆய்வுசெய்தால் ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு உலகின் பல நாடுகள் உதவுதை நாம் அறிந்துகொள்ளமுடியும். குறிப்பாக துருக்கி வழியாகவும், ஈராக் வழியாகவும் விற்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ். பெட்ரோல் மிகக்குறைந்த் விலையில் கிடைக்கிறது. ஒரு பேரல் 20 டாலர் வரை குறைவாகக் கிடைக்கிறது.

இஸ்ரேலுக்கு என்ன இலாபம்?

சிரிய இராணுவத்தின் 35% படைகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், சிரியாவின் தெற்கே இருக்கும் இஸ்ரேலுடனான எல்லையில் மீதமுள்ள 65% இராணுவப்படைகள் சிரியாவை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளோடு இஸ்ரேலுக்கு நேரடியான தொடர்பு இருக்கிறதா தெரியாவிட்டாலும், சிரியா அழிவதைப் பார்ப்பதற்கு இஸ்ரேல் காத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சிரியா அழிந்துபோவதில், இஸ்ரேலுக்கு சில ஆதாயங்கள் உண்டு:

1948 முதலே தங்களது நிலத்திலிருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறார்கள். அதில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்கு மிக அருகிலேயே சிரியாவில் அகதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சிரிய அரசுதான் ஆதரவளித்துவருகிறது. என்றாவது ஒரு நாள் பாலஸ்தீனம் என்கிற தேசம் உருவாகிவிடும் என்றும், தங்களது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பிச்சென்றுவிடலாம் என்றும் கனவு கண்டுகொண்டே அம்மக்கள் சிரியாவில் வாழ்ந்துவருகின்றனர். சிரியாவை இல்லாமல் செய்துவிட்டால், அங்கிருக்கும் பாலஸ்தீனர்களின் கனவையும் அழித்துவிடுவது எளிதானது என்று இஸ்ரேல் நினைக்கிறது. சிரியா அழிக்கப்பட்டுவிட்டால், அங்குவாழும் பாலஸ்தீன அகதிகள் துரத்தப்படுவதும் உறுதி.சிரியாவின் இராணுவம்தான் இஸ்ரேலுக்கு அப்பகுதியில் மிகுந்த போட்டியாக இருந்து வருகிறது. அதனால், சிரியாவின் தற்போதைய அரசைக் கவிழ்த்துவிட்டாலே, இஸ்ரேல் எவ்வித அச்சமுமின்றி இருக்கலாம் என்று நினைக்கிறதுசிரியாவின் தற்போதைய அரசு தன்னாலான உதவிகளை பாலஸ்தீனத்தில் இயங்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு செய்து வந்திருக்கிறது. அதனால், சிரியாவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால், பாலஸ்தீன போராட்ட இயக்கங்களை ஒடுக்குவதும் எளிதாகிவிடும் என்பது இஸ்ரேலின் கணக்குநீண்ட நாட்களாகவே ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்கவேண்டும் என்பது இஸ்ரேலின் இலட்சியமாக இருந்துவருகிறது. சிரியா இல்லாமல் போனால், ஹிஸ்புல்லாவை அழிப்பது இஸ்ரேலுக்கு சாத்தியமாகிவிடும்சிரியாவைத் தகர்த்துவிட்டால், பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரும் கோரிக்கையையே மெல்லமெல்ல அழித்துவிடமுடியும் என்பதும் இஸ்ரேலின் நம்பிக்கை

இப்படியான காரணங்களுக்காக, சிரியாவை இல்லாமல் செய்துவிடுவதை இஸ்ரேல் விரும்புகிறது. இதில் சந்தேகப் பார்வையோடு பார்க்கவேண்டிய இரண்டு முக்கியமான அம்சங்களும் உண்டு.

சிரியாவின் தெற்கு கோலன் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. சிரியாவில் எண்ணிலடங்கா அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள், இதுவரை அப்பகுதிகளுக்கு ஓரடிகூட எடுத்துவைத்து முன்னேறவுமில்லை, அப்பகுதிகளை மீட்டெடுக்க இஸ்ரேலுடன் சண்டைக்கும் போகவில்லை.அதேசமயம், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஹமாஸ் இயக்கத்தை எதிர்த்து சண்டையிடப்போவதாகவும், காஸாவை ஆக்கிரமிக்கப்போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்திருக்கிறது.

ஆக, சிரியாவில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களால் இஸ்ரேலுக்கு எவ்வித பாதிப்புமில்லை. ஆனால் சிரியா அழிக்கப்பட்டுவிட்டாலோ, அதனால் இஸ்ரேலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு.

துருக்கிக்கு என்ன இலாபம்?

முதலாம் உலகப்போருக்கு முன்னர் மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டுவந்தது துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒட்டோமன் பேரரசுதான். மத்திய ஆசியா முதல் சிரியா, எகிப்து வரை ஒட்டுமொத்த பரபப்பளவையும் ஒட்டோமன் பேரரசின் கீழ்தான் இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தோற்கடிக்கப்பட்டும் திவாலாக்கப்பட்டும் ஒட்டோமன் பேரரசின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சில அகண்டபாரதம் என்று சொல்லித்திரிவதைப்போல, துருக்கியிலும் அகண்ட துருக்கி என்று பேசித்திரிகின்றனர். மத்திய கிழக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர துருக்கி எப்போதும் ஆர்வமாகவே இருந்துவருகிறது. நேட்டோவில் துருக்கி இணைந்திருப்பதால், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஆயுதபலத்தில் பெரிய நாடாகவும், மத்தியகிழக்கின் அமெரிக்காவாகவும் துருக்கி கருதிக்கொள்கிறது.

சிரியா வீழ்ந்துபோவதால் துருக்கிக்கு மற்றொரு இலாபமும் இருக்கிறது. மத்தியகிழக்கிலேயே மிகப்பெரிய ஆடைத்தயாரிப்புத்துறையில் கொடிகட்டிப்பறக்கும் நாடு சிரியாதான். அதன்மீது துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு எப்போதும் பொறாமை இருந்துகொண்டிருக்கிறது. சிரியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப்போரில் சிரியாவின் ஆடைத்தொழிற்சாலைகளை நட்டமாக்குவதிலும் அவற்றை ஒன்றுமில்லாமல் செய்து பிரித்து துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பதற்குமே பல இடைத்தரகர்கள் களத்தில் வேலைசெய்யத்துவங்கியிருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவிற்கு என்ன இலாபம்?

ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிவருவது சவுதி அரேபியாதான் என்பது உலகறிந்த இரகசியம். சவுதி அரேபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பூமிக்கடியே குழாய்கள் அமைத்து பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை எடுத்துச்சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு சிரியாதான் மிகமுக்கியமான பகுதி. சிரியாவின் தற்போதைய ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, சிரியாவை உடைத்து அதன் ஒரு பகுதியில் தனக்குச் சாதகமான ஓராட்சி அமைந்தாலோ தான் தன்னுடைய விருப்பம் நிறைவேறும் என்பதை சவுதிஅரேபியா நன்கு உணர்ந்திருக்கிறது.

அதுதவிர மத்தியகிழக்கின் ஒரே ரவுடியாகவும் அமெரிக்காவின் ஆத்மார்த்த அடியாளாகவும் இருப்பது யார் என்கிற போட்டியில் மற்ற எல்லோரையும்விட முன்னனியில் இருப்பதும், எப்போதும் இருக்கவிரும்புவதும் சவுதிஅரேபியாதான். ஜனநாயகத்தின் எந்தக்கூறுகளும் இல்லாத சவுதிஅரேபியா, அமெரிக்காவின் நட்புப்பட்டியலில் இருந்துகொண்டேயிருக்கவே விரும்புகிறது.

சிரியாவின் பிரச்சனை மட்டுமா இது?

சிரியா தகர்க்கப்பட்டால், ரஷியாவின் எதிர்காலம் கேள்விக்குறியே. இந்நிலையில் சிரியாவில் நடக்கும் போர் என்பது ரஷியாவுக்கு வாழ்வா சாவா போராட்டமே. ரஷியாவில் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்கிறார்கள். சிரியாவை ஆக்கிரமித்தபின்னர், அதேபோன்றதொரு ஆக்கிரமிப்பும் பயங்கரவாத ஊடுருவல்களும் ரஷியாவுக்குள்ளும் நடத்துவதற்கான திட்டமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்கிற அமெரிக்காவின் பேரரசுக் கனவு மெல்லமெல்ல தகர்ந்துவருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பு, அவர்களுக்கென தனியான வங்கியினை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கும் திட்டம், ரஷியா-சீனா-இந்தியாவின் ஷாங்காய் கார்ப்பரேசன், சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி, கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக இருந்தாலும் சீனாவும் ரஷியாவும் சமீப காலத்தில் ஐ.நா.சபையில் செலுத்திவரும் ஆதிக்கம், ஐ.நா.சபையில் சில முக்கியமான நேரங்களில் சீனாவும் ரஷியாவும் தங்களது வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்காவை முறியடிப்பது, ஐரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கம், மெடிட்டரேனியன் நாடுகளோடு தன்னுடைய உறவினை பலப்படுத்திவரும் பிரான்சு, தென்னமெரிக்காவில் பலவிதங்களில் வளர்ந்துவரும் அர்ஜெண்டினா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் – இவையெல்லாமுமாக சேர்ந்து அமெரிக்காவை அச்சம்கொள்ள வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை. உலகின் ஒரே ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிடவேண்டும் என்கிற அமெரிக்காவின் இலட்சியத்தை அசைத்துப்பார்க்கும் சக்திகள் உலகெங்கிலும் வளர்ந்துவருவதை அமெரிக்கா சற்று தாமதமாகவே உணர்ந்திருக்கிறது. நேட்டோ, ஐ.நா.சபை, இசுலாமிய பயங்கரவாதம் என பலவற்றின் உதவியோடு தனது கனவினை நினைவாக்கப் புறப்பட்டிருக்கிறது அமெரிக்கா. நேட்டோவின் செலவுகளில் 75% த்தை அமெரிக்காதானே ஏற்றுக்கொள்கிறது. அதனால் அமெரிக்கா வைத்ததுதானே நேட்டோவில் சட்டம்.

லிபியாவை போல சிரியாவையும் எளிதில் தகர்த்துவிடலாம் என்று திட்டம் தீட்டப்பட்டது. சிரியாவில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது; இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்க முடிந்திருக்கிறது. ஆனால், சிரியாவை இன்னமும் ஏகாதிபத்திய அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கமுடியவில்லை. சிறுபான்மை அலவித்களால் ஆளப்படும் சிரியாவினை கைப்பற்றுவது அத்தனை கடினமாக இருக்காது என்றே அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால், சிரியாவின் உயர் அரசு அதிகாரிகள், ஆட்சியதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், இராணுவ ஜெனரல்கள், இராணுவப் படையினர் என எல்லா மட்டத்திலும் பொறுப்பிலிருப்பவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். அதனால், அமெரிக்கா நினைத்ததைப் போல சிரியாவில் சிறுபான்மையினத்தவரின் ஆட்சிக்கு எதிரான பெரும்பான்மை மக்களை கிளர்ந்தெழ வைக்கமுடியவில்லை. சிரியாவின் இராணுவத்தை இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோகூட வெல்லமுடியவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக இருந்தாலும் இன்னபிற அமெரிக்க ஆதரவு பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும், சிரியாவின் இராணுவத்தை வீழ்த்தாமல் சிரியாவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கவே முடியாது. ரஷியாவும் தன்னுடைய வாழ்வா சாவா போராட்டத்தில் சிரியாவுக்கு துணியாக போராடிக்கொண்டிருக்கிறது. ஹிஸ்புல்லாவும் சிரிய இராணுவத்தோடு இணைந்திருக்கிறார்கள். போரின் உக்கிரத்தைப் பொருத்தவரையில் ஈரானும் சிரியாவுக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியாவில் நடக்கிற போரானது, இரண்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடயிலான போரல்ல. உலகில் தன்னுடைய அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கிற அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய நாட்டிற்கும், தேசியவாத சக்திகளுக்கும் இடையிலான போர். உலகை தனது காலனியாக்கத்துடிக்கும் அமெரிக்காவிற்கும், சொந்த நிலத்தை பாதுகாக்கப் போராடும் சிரியாவின் மக்களுக்கும் இடையிலான போர். 1917ஆம் ஆண்டில் துவங்கிய மக்கள் புரட்சியின்மூலம் மக்களின் சொத்தாக உருவாகிக்கொண்டிருந்த ரஷியாவை 1990களில் தகர்த்து, சூறையாடிய வரலாறு, மீண்டும் நடந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிற ரஷியாவின் வாழ்க்கைப் போராட்டம்தான் இப்போர்.

Leave a comment