சட்டமும் நீதிமன்றங்களும், புனிதமானவைகளா ?

image

ஏழு மாவட்ட விவசாயிகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை தொடர்ச்சியாக பதிவு செய்திருந்தும் கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் நேற்று நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து குழாய் பதிக்கும் வேலைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தின் வழக்குறைஞர் ஏன் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை? நீதிபதிகள் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள் ? போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அரசின் திட்டம் மக்களை பாதிக்கிறது எனவே, அதை தடுக்க வேண்டும் என நீதிமன்றங்களின் கதவைத் தட்டினால், அது அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என தட்டிக்கழிக்கிறது. இதுவே ஒரு நிறுவனத்தின் திட்டத்தை எதிர்த்து அரசு (ஏதேதோ காரணங்களுக்காக) வழக்காடினால் அரசின் கொள்கை முடிவை இடக்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கிறது. இதற்கு ஓராயிரம் தீர்ப்புகளை எடுத்துக்காட்டுகளாக தரலாம். என்றால் சட்டங்களும், நீதிமன்றங்களும் எதற்காக, யாருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன? மக்கள் பாதிப்படையாமல் தடுப்பதற்காகவா? மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோரை பாதுகாக்கவா?

சட்டங்கள், நீதி முறைமை குறித்து தெளிய வேண்டுமென்றால் அரசு பற்றிய புரிதலிலிருந்து தான் தொடங்க முடியும். தற்போது நடைமுறையிலிருக்கும் அரசுமுறை ஜனநாயக அரசு எனப்படுகிறது. ஆனால் அது முதலாளித்துவ ஜனநாயக அரசுகள் என்பதே சரியானது. அரசுகள் அவை எந்த வடிவத்தில் இருந்தாலும் -முதலாளித்துவ ஜனநாயக அரசாக இருந்தாலும் குடியரசாக இருந்தாலும் முடியரசாக இருந்தாலும் – அது அனைத்து மக்களுக்கும் பொதுவானதல்ல. அரசு எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அந்த வர்க்கத்துக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அரசு எப்படி இருக்கிறதோ அந்தப்படியே அது உருவாக்கும் சட்டங்களும் இருக்கும். ஆனால் எப்போதுமே அரசு தன் சட்டங்களை அனைவருக்கும் பொதுவானது என நம்ப வைப்பதிலேயே தன் வெற்றியை சம்பதித்துக் கொண்டு வருகிறது. இப்போது நம்முன் இருக்கும் கேள்வியே கெயில் போன்ற தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் ‘நாங்கள் நிறுவங்களுக்கு சாதகமாகத்தான் இருப்போம்’ என்று வெட்டவெளிச்சமாக கூறிவரும் பொழுது, நீதிமன்றங்களின் அரசுகளின் இரட்டை வேடத்தை நாம் ஏன் நம்ப வேண்டும்? என்பதே.

இந்தியா என்பது இப்போதுக்கு முன் எப்போதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பலநூறு சிற்றரசுகளாக இருந்த பகுதியை முகலாயர்கள் ஒருங்கிணைத்தார்கள். அதன்பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அவர்களை அடியொற்றி இன்றைய அரசு இருக்கிறது. இந்தக் காலங்களிலெல்லாம் ஒரே சட்ட முறைமைகளா இருந்து வந்தது? மாறும் காலங்களுக்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் அந்த மாற்றங்களுக்கான அடிப்படை என்ன? மக்கள் பொருட்படுத்த தேவையில்லாத கிள்ளுக் கீரைகள் என்றால், நாடு என்பது என்ன? அந்த நாட்டில் வாழும் மக்களா?இல்லை நிலப் பரப்புகளுக்கு உட்பட்ட மண்ணா? மக்களை பொருட்படுத்தாத சட்டங்களை, அரசுகளை அந்த மக்கள் என்ன செய்ய வேண்டும்?

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வித்தியாசமான ஒரு கருத்தைக் கூறினார். “சட்டங்கள் மக்களுக்கு எதிராக ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்காக சட்டங்களை மீறுவது இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த அம்பேத்காருக்கு செய்யும் அவமரியாதை இல்லையா?” இது அறியாமை மட்டுமல்ல, என்ன காரணத்துக்காக அம்பேத்கார் பயன்படுத்தப்பட்டாரோ அதில் சிக்கிக் கொண்டிருக்கும் மடமையும் கூட. இந்திய அரசியல் சாசனத்தை யாத்த அம்பேத்கார் தான் ‘இதை எரிக்கும் முதல் ஆளாகவும் நானே இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார். இரட்டை வாக்குரிமையை கொண்டு வந்து விட வேண்டும் என அவர் பட்டபாட்டையும்,காந்தியால் அவர் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டதையும் எவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா?

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஒடுக்கப்பட்டவர்கள். இந்திய அரசியல் சாசனத்தை வகுக்க பார்ப்பனர்கள் கோலோச்சியிருந்த அவையில் அம்பேத்கார் தேரிந்தெடுக்கப்பட்டதற்கு அவருடைய மேதமை மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியுமா? இது ஒரு பக்கம் என்றால், இந்திய அரசியல் சாசனத்தை அம்பேத்கார் வகுத்தார் என்பதே ஒரு பொன்மாற்று(பம்மாத்து) தான். இவைகளையெல்லாம் அறியாதவரல்ல அம்பேத்கார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதன் மூலம் சரியான திசைவழியை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதே அவரின் முயற்சியாக இருந்தது.

இந்திய அரசியல் சாசனம் வகுக்கப்பட வேண்டும் என முதலில் எம்.என்.ராய் தன் இந்தியன் பேட்ரியாட் எனும் நூலில் 1927 ல் வெளிப்படுத்தினார். இதை காங்கிரசும் ஏற்றுக் கொண்டது. 1945ல் தான் இந்திய அரசியல் சாசனத்தை வகுப்பதற்காக ஒரு நிர்ணயசபை ஏற்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து 296உறுப்பினர்களையும், பிற சிற்றரசுகளிலிருந்து 93 உறுப்பினர்களையும் கொண்டு இந்திய அரசியல் நிர்ணயசபை என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த நிர்ணய சபை அரசியல் சாசனத்துக்கான வழிமுறைகளை உருவாக்க 22குழுக்களை ஏற்படுத்தியது.

கண்காணிப்பு குழு

கொடிக்குழு

மத்திய அரசின் அதிகாரம் குறித்த குழு

மாகாண அரசியலமைப்பு குழு

ஆவணக்குழு

நிதி மற்றும் அரசு அலுவலர்கள் குழு

நடைமுறைக் குழு

மொழிபெயர்ப்புக் குழு

அலுவல்குழு

அரசியல் அமைப்புக்கென 12 குழுக்கள்

வரைவுக் குழு

இவை தான் அந்த 22 குழுக்கள். இந்த 22 குழுக்களில் வரைவுக் குழுவுக்கு மட்டும் தான் அம்பேத்கார் தலைவராக இருந்தார். அம்பேத்காரையும் முகம்மது சாதுல்லா போன்ற ஒன்றிரண்டு இஸ்லாமியர்களையும் தவிர இந்த 22 குழுக்களிலும் நிறைந்திருந்தது பார்ப்பன, பனியாக்கள் தான்.

அம்பேத்கார் தலைமையிலான வரைவுக் குழுவின் பணி, ஏனைய குழுக்கள் இங்கிலாந்து, பிரிட்டீஷ் இந்தியா,ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளின் சட்டங்களிலிருந்து தொகுத்துத் தருவதை ஆராய்ந்து இந்தியாவுக்கு ஏற்ப திருத்தியமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு சிக்கலில்லாமல் வகுத்துத் தருவது தான். இதில் அம்பேத்கார் கொண்டுவர நினைத்த எதையும் அவ்வளவு எளிதில் கொண்டுவர முடிந்ததில்லை என்பது வரலாறாக இருக்கிறது.

இன்றுவரை அந்த பார்ப்பன பனியாக்களின் மேலாதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூடுதலாக இன்று அரசு இயந்திரம் முழுமையும் பார்ப்பன மயமாகி இருக்கிறது. தாராளமயமும் பார்பனியமும் ஒன்றிணைந்து செல்கிறது.பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பதினைந்து முக்கிய துறைகளில் தாராள அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றால் அது மக்களுக்கு தெரியாதபடி பார்ப்பனியம் மாட்டுக் கறியை பிரச்சனையாக்கி அத்லக்களை கொல்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். இதுவே செய்தியாக கடந்து போகுமளவுக்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள் என்றால் கெயில் குழாய் பதிப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்து யாருக்கு என்ன கவலை இருக்கும்? எப்போதும் இளம் பெண்களுடனே இருக்கும் சாராயப் பொறுக்கி மல்லையாவுக்கு பல்லாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்வதை விவாதிக்காமல் ஏழைகளுக்கு ஒப்புக்கு கொடுக்கப்படும் மானியங்களால் இந்தியப் பொருளாதாரம் வீழ்வதாக விவாதிக்கும் நிலை ஏற்பட்டதன் பின்னணி இதே பார்பனியத்தின் கைகளில் ஊடகங்கள் இருப்பது தானே.

எல்லாத் துறைகளிலும் ஊடுருவி இருக்கும் பார்ப்பனியம் நீதித்துறையில் இன்னும் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. எதிர்ப்புக் குரலே இல்லாமல் செய்துவிடும் எத்தனிப்புகளோடு அது தீவிரம் காட்டி நிற்கிறது.நீதித்துறை ஊழலை எதிர்த்து பேரணி நடத்திய வழக்குறைஞர்களை தொழில் செய்ய விடாமல் பழி வாங்கியிருக்கிறது. அதுவும், நீதித்துறை ஏற்றுக் கொண்டிருக்கும் விழுமியங்கள் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசி விட்டு அப்பட்டமாய் அம்மணமாகி நிற்கிறது. காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களை ஆர்.எஸ்.எஸ் அம்பிகளைக் கொண்டு நிரப்புவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி நிற்கிறது.

லாலுவையும், பாதலையும் தண்டித்து தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ளும் நீதிமன்றம் பாசிச ஜெயாவின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. நரவேட்டை ஆடினாலும் மோடி, அமித்ஷா’வை மயிலிறகால் வருடும் நீதிமன்றம் கூட்டு மனசாட்சிக்காக குற்றமே செய்யாத அப்சல்குரு களை கொன்று போடுகிறது. நிர்பயாக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்த அதே வேளையில் பெண்களை குத்தாட்டம் ஆடவிட்டு தங்கள் வக்கிரங்களை தணித்துக் கொள்கிறார்கள் நீ….திபதிகள்.

இப்படி எல்லா திசைகளிலும், மக்களுக்கு எதிராக இரக்கமில்லாமல் செயலாற்றும் நீதி மன்றங்களையும் சட்டங்களையும் அரசையும் இல்லாத புனிதம் சொல்லி இன்னமும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமா ? அல்லது தூக்கி வீசிவிட்டு மக்கள் தங்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமா ?

Leave a comment